Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, November 6, 2017

நீர்கொழும்பிலும் பெற்றோலுக்கு நீண்ட வரிசை: மக்கள் விசனம் தெரிவிப்பு

 நீர்கொழும்பு நகரிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பெற்றோலுக்கு  பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. நீர்கொழும்பு கொப்பரா சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் பெற்றோலை பெறுவதற்காகன நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.
இன்று முற்பகல் தளுபத்தை பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் விநியோகம் ஆரம்பமானது.  நகரவாசிகள் மட்டுமன்றி தூர இடங்களிலிருந்தும் பெற்றோலை கொள்வனவு செய்வதற்காக வாகன சாரதிகள் வருகை தருவதன் காரணமாக இந்த இரண்டு நிரப்பு நிலையங்களிலும் மக்கள் நீண்ட கியூவில் நின்றனர்.

இதுதொடர்பாக முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கருத்து தெரிவித்ததாவது.
நான் நேற்றைய தினமும் முச்சக்கர வண்டி ஓட்டவில்லை. பெற்றோல் இல்லாமையே காரணம். இன்றைய தினம் பெற்றோலை பெறுவதற்காக மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக காத்து நிற்கிறேன். எமது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்க காலத்திலும் மக்கள் இதுபோல் பெற்றோலுக்காக வரிசையில் நின்றனர். நல்லாட்சியிலும் இதுவே நடக்கிறது. இங்கு அமைச்சர்கள் யாரும் வரிசையில் நிற்கவில்லை. வாக்களித்த மக்களே வரிசையில் நிற்கிறார்கள் என்றார்.




கார் சாரதி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.  பெற்றோலுக்காக மக்கள் அவஸ்தைப்படுகின்றனர். இதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எரிபொருள் விநியோகம் தொடர்ந்து இடம்பெறாவிட்டால் அடுத்து வரும் இரண்டொரு தினங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை  பெரிதும் பாதிக்கப்படும். மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். மக்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். நல்லாட்சிக்கு இது நல்லதல்ல என்று தெரிவித்தார்.

 சரியாக தமது வேலையை செய்ய முடியாவிட்டால் அவர்கள் வீட்டில் இருக்க வேண்டும்  என்று மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment