Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, December 12, 2017

33 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஜனாப் M.S.M. முனவ்வர்

நீர்கொழும்பு கல்வி வலயத்திற்குட்பட்ட நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் பிரதி அதிபராகக் கடமையாற்றிய ஜனாப் M.S.M.. முனவ்வர் அவர்கள் 12.12.2017 அன்று தனது 33 வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார். மாத்தறை வெலிகமையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், ஜனாப் மொகமட் ஸாலி ஜனாபா உம்மு றகுமா ஆகியோரின் சிரேஷ்ட புத்திரராவார்.
                இவர் தனது ஆரம்பக் கல்வியை வெலிகமை அறபா தேசிய பாடசாலையிலும், சாதாரண தரம், உயர் தரம் ஆகியவற்றை பேருவளை ஜமியா நழிமியாவிலும் பூர்த்தி செய்து, தனது பட்டப்படிப்பினை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்து,

அரசியல் விஞ்ஞானப் பாடநெறியில் கலைச்சிறப்பு பட்டதாரியாய் வெளியேறினார். பின் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின்படிப்பு கல்வியியல் டிப்ளோமாவை பூர்த்தி செய்தார். அத்தோடு பட்டப்பின் படிப்பு கல்வி முகாமைத்துவ டிப்ளோமா, பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா ஆகியவற்றை தேசிய கல்வி நிறுவகத்தில்; ஆங்கில மொழி மூலம் கற்று அதிவிசேட சித்திகளை பெற்றுக் கொண்டார். அத்தோடு இலங்கை மொழி பெயர்ப்பாளர் சேவை தரம் 1ல் இரு தடவை தேறினார்.


     27.12.1984 அன்று அக்குரசை சதாத் மகா வித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்று பணியாற்றத் தொடங்கிய இவர் வெலிகமை ஸாஹிரா மகா வித்தியாலயம், வெலிகமை அறபா தேசிய பாடசாலை,    நீர்/அல்பலாஹ் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்பித்து பின் நீர்ஃஅல்பலாஹ் மகா வித்தியாலயத்தில் 1996ம் ஆண்டு தொடக்கம் 2002ம் ஆண்டு வரை அதிபராகக் கடமையாற்றினார். அதன் பின் 02.01.2002ம் ஆண்டு நீர்/ விஜயரத்தினம் இ.ம.கல்லூரியில் பிரதி அதிபராக பொறுப்பேற்று தொடர்ச்சியாக 16 வருடங்கள் கடமை புரிந்து தமது 60 வது அகவையில் 33 வருட கல்விச்சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
           இவர் இலங்கை அதிபர் சேவையில் தரம் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராவார். இப்பாடசாலையில் ஆசிரியர் விடுமுறை விபரங்களைக் கச்சிதமாகப் பேணி, ஆசிரிய நலன்புரி ஒன்றியத்தலைவராகவும், இலவசப் பாடப்புத்தக பயன்பாட்டின் பொறுப்பாளராகவும்,  சிற்றுண்டிச்சாலை பொறுப்பாளராகவும், ஒழுக்காற்று குழு அங்கத்தினராகவும் இருந்து நிர்வாகம் சார்ந்த பணிகளில் திறம்பட பணியாற்றியவர் ஆவார். மும்மொழிப் புலமை வாய்ந்த இவர் முத்துப் போன்ற கையெழுத்துக்களினால் பதிவுகள் பலவற்றை செய்து பலரதும் பாராட்டுக்களைப் பெற்றவராவார்.
எல்லோருடனும் அன்புடனும் பண்புடனும் பழகும் இவர் ஏனைய ஆசிரியர்களின் திறமைகளை கண்ட இடத்து அவர்களை பாராட்டி உற்சாகமளிக்கும் உயரிய பண்பை கொண்டவர். இவரது சேவையினை எமது கல்விச் சமூகம் பாராட்டுவதுடன் இவரும், இவரது குடும்பமும் மகிழ்வோடு வாழ்வாங்கு வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றனர்.
ஆசிரியர் நலன்புரி ஒன்றியம்

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 



No comments:

Post a Comment