Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, March 27, 2018

நல்லாட்சி அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஸவின் கட்சிக்கு நீர்கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு இடமளித்தமை வாக்களித்த மக்களுக்;கு ஏமாற்றத்தை தருகிறது. - ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் ரொயிஸ் பெர்னாந்து


 இந்த நல்லாட்சி அரசாங்கம்  மஹிந்த ராஜபக்ஸவின் கட்சிக்கு நீர்கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு  இடமளித்தமை  வாக்களித்த மக்களுக்;கு ஏமாற்றத்தை தருகிறது என்று  ஐக்கிய தேசியக் கட்சியின்  நீர்கொழும்பு பிரதான  அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ரொயிஸ் பெர்னாந்து  தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின்  நீர்கொழும்பு கட்சி காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்சொன்னவாறு குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

நான் ஜனாதிபதியை சந்தித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தெரிவாகியுள்ள ஆறு உறுப்பினர்களின் ஆதரவையும் எமது கட்சிக்கு பெற்றுத் தருமாறு கூறினேன். எமக்கு 19 உறுப்பினர்கள் உள்ளார்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தெரிவாகியுள்ள ஆறு உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு நான்கு வருட காலத்திற்கு நகரில் சிறந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ளமுடியும் என தெரிவித்தேன். கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்கவையும் சந்தித்தேன்.  ஆயினும் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க என்னுடன் தொடர்பு கொண்டு இ துதொடர்பாக கதைத்தார். அவரும் முயற்சி செய்தார். ஆயினும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஏற்படுத்திய  இந்த நல்லாட்சி அரசாங்கம்  மஹிந்த ராஜபக்ஸவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு  இடமளித்தமை  வாக்களித்த மக்களுக்;கு ஏமாற்றத்தை தருகிறது. இது மக்களுக்கு பிரச்சினையாகும்.
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நீர்கொழும்பு மாநகர சபையில் உள்ள 29 பிரிவுகளில் 19 பிரிவுகளை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றி சிறப்பான வெற்றியை பெற்றது. அது மட்டுமன்றி   நீர்கொழும்பு தேர்தல் தொகுதியிலும் எமது கட்சி வெற்றி பெற்றது.  ஆயினும்  வெள்ளிக்கிழமை (23-3-2018)  மேயர் தெரிவு இடம்பெற்றபோது எமது கட்சியினால் பிரேரிக்கப்பட்ட நான்  (ரொயிஸ் பெர்னாந்து) தெரிவு செய்யப்படவில்லை. அதற்கான காரணம் என்ன? என்ன நடந்தது?
முதல் காரணம் இந்த தேர்தல் முறையில் சர்வஜன வாக்கெடுப்பு முறை விகாரமடைந்துள்ளது. அடுத்த காரணம்; மேயர் பதவிக்கான வாக்கெடுப்பின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஆறு உறுப்பினர்களில் ஐந்து பேர் கறுப்பு பணத்திற்கு  விலைக்கு வாங்கப்பட்டமையாகும். அதனை நாங்கள் ஆதாரங்களுடன் கூறுகிறோம். காரணம் எமது கட்சி உறுப்பினர்களையும் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்ஸா  மற்றும் அவரது குழுவினர் பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்க முயன்றனர். ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஆதாரம் எம்மிடம் உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்ஸாவுக்கு இலங்கையில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு வர்த்தகமும் கிடையாது.  அவர்கள் பரம்பரையாக வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களும் அல்லர். அவரும் அவரது தந்தையும் சம்பாதித்த கறுப்புப் பணத்தை கொண்டு மாநகர சபை உறுப்பினர்களை விலைக்கு வாங்கியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் மீதோ அல்லது அதன் ஆதரவாளர்கள் மீதோ தாக்குதல் நடத்தவில்லை. ஜனநாயகத்தை விரும்பும், சர்வஜன வாக்களிப்பின்மீது நம்பிக்கை வைத்துள்ள நீர்கொழும்பு மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவே தெரிவு செய்யப்பட்ட மேயர் பதவிக்கான நியமனம் சட்ட ரீதியற்றதாகும்.   நீர்கொழும்பு மாநகரின் உண்மையான  மேயர் நானாவேன்.
   நீர்கொழும்பில் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் ஊழலுக்கு எதிராக  தமது இரத்தத்தின் மூலமாக கையொப்பமிட்டு வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் தேர்தலின் பின்னர் அவர்கள்  அதற்கு மாற்றமாக நடந்து கொண்டார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நீர்கொழும்பு இணை அமைப்பாளர்களில்  ஒருவரான லலித்  டென்ஸில் மாத்திரம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் எம்முடன் உள்ளார்.   இணை அமைப்பாளர்களில் ஒருவரான எம்.எஸ்.எம். சகாவுல்லா வெற்றிபெற்ற ஏனைய ஐவரையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை சார்பில்  மேயர் பதவிக்கு போட்டியிட்ட தயான் லான்ஸாவுக்கு  ஆதரவு வழங்க உத்தரவிட்டார். இதன் மூலமாக அவர்கள் மக்களை ஏமாற்றியுள்ளார்கள்.  கறுப்புப் பணத்தையும், போதைப் பொருள் விற்பனை மூலமாக சம்பாதித்த பணத்தையுமே அவர்கள் இலஞ்சமாக பெற்றுள்ளார்கள். எதிர்காலத்தில் மக்கள் அதற்கான பதி;லை அவர்களுக்கு வழங்குவார்கள்.
 கடந்த ஜனாதிபதி தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஜனாதிபதி வெற்றி பெற்றதற்கான காரணம் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியை 31 ஆயிரம் மேலதிக வாக்குகளால் நாங்கள் வெற்றியடையச் செய்தமையினாலாகும். இல்லாவிட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பதவியில் இருக்க முடியாது. அதுபோல் நடந்து முடிந்த பொதுத் தேர்தலிலும் கம்பஹா மாவட்டத்தில் எமது தொகுதி வெற்றி பெற்றது.  அப்போது எமது  தலைவர்களுக்கு நாங்கள் தேவைப்பட்டோம். ஆயினும் மக்களின் பெரும்பான்மை விருப்பதின் அடிப்படையில் நீர்கொழும்பில் நாங்கள் ஆட்சியை அமைக்கும்போது  அதற்கு மாற்றமாக தலைவர்கள் நடந்து கொண்டமை பிரச்சினையாகும். ஆதற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து இடம்பெறும் என்றார்.


No comments:

Post a Comment