நடிகை ருக்மணி தேவியின் கல்லறையை உடைத்து நாசப்படுத்திய எழுவருக்கு பிணை , 5 இலட்சம் ரூபா நஷ்டயீடு செலுத்த உத்தரவு
மறைந்த பிரபல சிங்களத் திரைப்பட நடிகையும் பாடகியுமான ருக்மணி தேவியின் கல்லறையை உடைத்து நாசமாக்கியமை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏழு சந்தேக நபர்களையும் நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்.என்.பி. அமரசிங்க தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ய நேற்று (15-8-2011) உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு நகர முன்னாள் மேயர் ஆனந்த முனசிங்க உட்பட ஏழு சந்தேக நபர்களே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவர்களாவர்.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கல்லறையை நாசப்படுத்தியமைக்காக 10 இலட்சம் ரூபா நஷ்டயீடாகக் கேட்கப்பட்டது..பின்னர் இருதரப்பினரும் 5 இலட்சம் ரூபா நஷ்டயீட்டுத் தொகைக்கு இணக்கம் தெரிவித்தனர்.இதனை அடுத்து நீதவான் ஐந்து இலட்சம் ரூபாவை நஷ்டயீடாக வழங்குமாறு சந்தேக நபர்களுக்கு உத்தரவிட்டார்.
சந்தே நபர்கள் கடந்த 12 ஆம் திகதி நீர்கொழும்பு ,ஏத்துக்கால பொது மயான பூமிக்குள் அத்துமீறி நுழைந்து ருக்மணி தேவியின் கல்லறையை உடைத்து நாசப்படுத்தி விட்டுச் சென்றமை தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது
No comments:
Post a Comment