இந்திய மீனவர்கள் எமது கடல் எல்லையை ஆக்கிரமிப்பது
வடக்கு மக்களின் உரிமை மீறலாகும்.
- மீன் பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன
தமிழ் நாட்டிலுள்ள அரசியல் வாதிகள் வடக்கில் உள்ள தமிழ் மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்குமாறு குரல் கொடுத்தாலும் இந்திய மீனவர்கள் வடக்கு மீனவர்களின் கடல் எல்லையை ஆக்கிரமித்து மீன் வளங்களை கொள்ளையடித்துச் செல்வது வடக்கு மக்களின் மனித உரிமையை அப்பட்டமாக மீறும் செயலாகும் என்று மீன் பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் வடக்கு மீனவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் குறிப்பிட்டுள்ளதாவது,
ஜெயலலிதா, வைகோ, நெடுமாறன் உட்பட அரசியல்வாதிகள் முதலைக் கண்ணீர் வடிப்பது வடக்கு மக்களின் மேல் உள்ள அன்பினால் அல்ல.அவர்களின் அரசியல் இலாபத்திற்காகவாகும்.
ஒரு தரப்பினரின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறிக்கொண்டு , இன்னொரு வகையில் அந்த தரப்பினருடைய மனித உரிமைகளை மீறுகின்ற அந்த அரசியல்வாதிகளின் இரட்டைவேடத்திற்கு எதிராக வடக்கு மீனவர்கள் மட்டுமன்றி தெற்கு மீனவர்களும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் எமது கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்துள்ள விதத்தை , அந்த படகுகள் எமது கடல் வளங்களை நாசப்படுத்தி உள்ள விதத்தை காட்டும் ஆதாரங்களை இந்திய பிரதமருக்கு வழங்கியுள்ளோம் என்றார்
No comments:
Post a Comment