Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, March 21, 2012

போலி கடனட்டையை பயன்படுத்தி பல கோடி ரூபா பணத்தை மோசடியாக பெற்ற உக்ரைன் நாட்டவர்கள் இருவர் கைது

போலி கடனட்டை மூலமாக பல கோடி ரூபா பணத்தை மோசடியாக பெற்ற உக்ரைன் நாட்டைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி சந்தன கலப்பதி தெரிவித்தார் .
இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து நீர்கொழும்பு ஏத்துக்கால பிரதேசத்தில் உள்ள
ஹோட்டல் ஒன்றில் வைத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதோடு, ஒரு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணம் மற்றும் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் .
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 108 போலி கடனட்டைகள் , 60ஆயிரம் யூரோக்கள் (90 இலட்சம் இலங்கை ரூபா), 11 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா இலங்கைப்பணம் மற்றும் பல்வேறு நாடுகளினதும் பணம் என்பனவும் லெப்டொப் (மடிக்கணனி ) ஒன்றையும், எட்டு செல்லிடத் தொலைபேசிகளையும் , தகவல்களை பதிவு செய்யும் இலத்திரணியல் உபகரணம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் .

சந்தேக நபர்கள் இருவரும் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஆடம்பரமான முறையில் பணத்தை செலவிட்டுள்ளனர் .இது தொடர்பாக இருவரின் நடத்தையில் சந்தேகமடைந்த சிலர் பொலிஸ் உயரதிகாரிக்கு தகவல் வழங்கியதை அடுத்தே , பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர் .

நீர்கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி சந்தன கலப்பதியின் ஆலோசனையின் கீழ்,  நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவின் வழிகாட்டலின் படி , குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சுபாஷ் சந்தன பிரியதர்ஷன  தலைமையிலான குழுவினர் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்ததுடன், பணத்தையும் பொருட்களையும் மீட்டுள்ளனர் . இது தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .




No comments:

Post a Comment