நீர்கொழும்பு பிரதான ரயில் நிலையத்துக்கு முன்னால் ரயில்வே
திணைக்களத்திற்கு சொந்தமான காணியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களை அகற்றுவதற்கு
நீர்கொழும்பு மாநகர சபை எடுத்துள்ள தீர்மானத்தினால் அங்கு வர்த்தக நிலையங்களை
நடத்தி வரும் வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2 ஆம் திகதி (2-32015) குறித்த கடைத் தொகுதிகளுக்கு முன்பாக நீர்கொழும்பு மாநகர சபையினால்
ஒட்டப்பட்டுள்ள அறிவித்தலே இதற்கான காரணமாகும். இன்னும் 7 தினங்களுக்குள் வியாபாரிகள்
தமது கடைகளை அங்கிருந்து அகற்ற வேண்டுமென்றும் அவ்வாறு அகற்றாவிடில் நீர்கொழும்பு மாநகர சபை 7 தினங்களின் பின்னர்; முன்னறிவித்தலின்றி குறித்த கடைகளை அகற்றுமெனவும் அந்த அறிவித்தலி;ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அங்கு வர்த்தக நிலையங்களை நடத்தி வரும்
வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.
அங்கு வியாபார நிலையமொன்றை நடத்தி வரும் பெரியமுல்லையைச் சேர்ந்த முஹம்மத் நஸீர் என்பவர் தெரிவிக்கையில்,
'நாங்கள் ரயில்
நிலையத்திற்கு முன்னபாகவுள்ள புரோட்வே
வீதியில் கடந்த 20 வருடங்களாக வியாபாரம் செய்து
வருகிறோம். அந்த நடைபாதை வீதியில் எமது வர்த்தக நடவடிக்கைகளை தடுக்கும் வகையில்; கடந்த இரண்டரை வருடங்களுக்கு
முன்னால் நீர்கொழும்பு மாநகர சபை, ரயில்வே திணைக்களத்திற்கு
சொந்தமான காணியில் எமக்கு தற்காலிகமாக வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி
அளித்தது. மேல் மாகாண சபை அமைச்சர் நிமால் லான்ஸா அப்போது ரயில்வே துறை அமைச்சராக
இருந்த குமார் வெல்கமவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தக் காணியை வர்த்தக
நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகர சபையூடாக அனுமதியை பெற்றுக் கொடுத்தார். அப்போது 6 மாத காலம் இங்கு வர்த்தக
நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டதுடன் அதற்கிடையில் வேறோர் இடத்தில்
எமக்கு கடைகளை அமைத்து தருவதாகவும் கூறப்பட்டது. நாங்கள் கடந்த இரண்டரை
வருடங்களுக்கு மேலாக இந்த இடத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த கடைத் தொகுதிகளை அமைப்பதற்கு ஒவ்வொரு வர்த்தக நிலைய உரிமையாளரும் தலா 3 இலட்சம் ரூபா வரை
செலவளித்துள்ளனர். கடன் பெற்றும் நகைகளை விற்றும் கடைகளை அமைத்துள்ளனர். மின்சார
இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு கடை உரிமையாளரும் 70 ரூபாவை வாடகைப் பணமாக மாநகர
சபைக்கு செலுத்தி வருகிறோம். இங்கு மொத்தமாக 44 கடைகள் உள்ளன'' என்றார்.
அங்கு செல்லிடத் தொலைப்பேசி நிலையமொன்றை நடத்தி வரும்
இர்ஷாத் என்பவர் தெரிவிக்கையில், இங்கு பல்வேறு வகையான
வியாபாரிகள் தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். தினசரி சிறிய ஒரு தொகையே
எமக்கு வருமானமாக கிடைக்கின்றது. இந்தக் கடைகளை உடைப்பதற்கான பிரேரணையை
நீர்கொழும்பு மாநகர சபையில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஹீஸான் கொண்டு
வந்துள்ளார். அந்த பிரேரணை
நிறைவேற்றப்பட்ட அதற்கிணங்க இந்த அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. மாநகர சபை
உறுப்பினர் எமக்கு அநீதி இழைத்துள்ளார். கடைகள் உடைக்கப்பட்டால் நாங்கள்
தெருவுக்கு வருவோம். 80 குடும்பங்கள் பாதிக்கப்படும்'' என்றார்.
இதேவேளை, நீர்கொழும்பு ரயில்வே
திணைக்கள அதிகாரி ஒருவரிடம் இது தொடர்பாக நாங்கள் வினவிய போது, ஷஷஎமது ரயில்வே நிலையத்துக்கு
சொந்தமான காணியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கடைகள் அகற்றப்பட வேண்டும். இது
தொடர்பாக நாங்கள் நீர்கொழும்பு மாநகர சபைக்கு பல தடவைகள் அறிவித்துள்ளோம். இந்தக்
காணியை முறையற்ற விதத்தில் பிரதேச அரசியல்வாதிகள் பயன்படுத்த அனுமதித்துள்ளனர்' என்றார்.
குறித்த கடைகள் எந்தவேளையும் உடைக்கப்படலாம் என்ற அச்சத்துடன் வியாரிகள் உள்ளனர். தமக்கு நீதி
கிடைக்க வேண்டும் என்பதே அவர்களது
வேண்டுகோளாகும்.
No comments:
Post a Comment