கொச்சிகடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடன்காவ பிரதேசத்தில்
மணல் தோண்டுவதற்காக வெட்டப்பட்ட குழியில் நீராடச்
சென்ற 13 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக மரணத்தை தழுவியுள்ளனர்.
நீர்கொழும்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த தோப்பு றோமன் கத்தோலிக்க
தமிழ் வித்தியாலயத்தில் தரம் எட்டில் (8) கல்வி
பயிலும் உடன்காவை பிரதேசத்தில் வசிக்கும் ரஞ்சித்
குமார் தினுஸ், ஒத்பேரிய பிரதேசத்தில் வசிக்கும் ராமகிருஸ்ணன் பிரியதர்சன் என்ற இரு
சிறுவர்களே இவ்வாறு பரிதாபகரமாக மரணத்தை தழுவியவர்களாவர்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
வெள்ளிக்கிழமை (30) பிற்பகல் தோப்பு றோமன் கத்தோலிக்க தமிழ்
வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் உடன்காவ பிரதேசத்தில் உள்ள மைதானத்தில்
விளையாடியுள்ளனர். இவர்களில் மூன்று மாணவர்கள் அருகில் உள்ள மணல் தோண்டுவதற்காக வெட்டப்பட்ட
நீர் நிறைந்த குழியில் குளித்துள்ளனர். இதன்போது அந்த சிறுவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.
அதில் ஒரு சிறுவன் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லப்பட்டார். நீரில் மூழ்கிய இரு
சிறுவர்களினதும் சடலங்கள் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.
பல்வேறு அதிகார தரப்பினரினது ஒத்துழைப்புக்களுடன் கொச்சிக்கடை உடன்காவ
பிரதேசத்தில வியாபார நோக்கில் மண் தோண்டுவதற்காக வெட்டப்படும்; ஆழமான பாரிய குழிகளில்
விழுந்து இதற்கு முன்னர் பலர் உயிரிழந்துள்ளதாகவும், சட்டவிரோதமான முறையில் தோண்டப்படும்
குழிகளால் சுற்றாடலுக்கும் மாசு ஏற்பட்டுள்ளதுடன்; தமது வீடுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் குற்றச்சாட்டு
தெரிவிக்கின்றனர்.

No comments:
Post a Comment