16 இலட்சம் ரூபா பணமோசடி தொடர்பான வழக்கில்
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மினுவாங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஹேவா
பத்திரனலாகே லசந்த சாலிஹ சரத்குமார நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணையில்
விடுதலை செய்ய நேற்று (21)
உத்தரவிடப்பட்டார்.
பிரதிவாதியான பிரதேச
சபை உறுப்பினரை நீர்கொழும்பு மேலதிக
நீதவான் ஹால் பத்தெனிய தேவகே 50 ஆயிரம் ரூபா ரொக்கப்; பிணையிலும் தலா 20 இலட்சம் ரூபா கொண்ட
இரு நபர்களின் சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
மோசடி செய்த பணத்தினை
வழக்கின் முறைப்பாட்டாளருக்கு திரும்பிச் செலுத்த பிரதிவாதி ஒத்துக் கொண்டதை
அடுத்தே பிரதிவாதியை பிணையில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.
வழக்கு இடம்பெற்ற நேற்றைய
தினம் இரண்டு இலட்சம் ரூபாவை வழங்குமாறும், மிகுதி 14 இலட்சம் ரூபாவை
அடுத்த வழக்குத் தினத்திற்கு முன்னதாக வழங்க வேண்டும் எனவும் நீதவான்
பிரதிவாதிக்கு உத்தரவிட்டார்.
அத்துடன்
முறைப்பாட்டாளரை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது எனவும், அவ்வாறு
நடந்து கொண்டால் பிணை ரத்துச் செய்யப்படும் எனவும் பிரதிவாதியை நீதவான்
எச்சரித்தார்.
கந்தவத்த கொட்டுகொட
பிரதேசத்தைச் சேர்ந்த பெஸ்குவல் ஹந்தி உபுல் பிரியந்த சில்வா என்பவரே இந்த
வழக்கின் முறைப்பாட்டாளராவார். பிரதிவாதி ஒருவருடத்திற்கு முன்னர்
முறைப்பாட்டாளரிடம் வியாபாரத் தேவைக்காக கைமாற்றாக 16 இலட்சம் ரூபாவை
பெற்றுள்ளதுடன், பின்னர் பணத்தை
திரும்பிச் செலுத்தும் போது வங்;கிக் கணக்கில் பணம் இல்லாத நிலையில் செல்லுபடியாகாத
காசோலையை வழங்கியுள்ளார் என விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு
எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்படவுள்ளது.
No comments:
Post a Comment