Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, January 22, 2013

நீர்கொழும்பு நகரின் தவப்புதல்வன் ஜெயம் விஜயரத்தினத்தின் மறைவு பேரிழப்பாகும் - புலம்பெயர் படைப்பாளி லெ. முருகபூபதி



 நீர்கொழும்பு நகரின் தவப் புதல்வன் ஜெயம் விஜயரத்தினத்தின் மறைவு பேரிழப்பாகும் என்று  இலங்கை வந்துள்ள புலம்பெயர் படைப்பாளி பிரபல எழுத்தாளர் முருகபூபதி வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (18-1-2013) காலமான நீர்கொழும்பு
நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் முன்னாள் பிரதி மேயருமான அமரர் ஜெயம் விஜயரத்தினத்தினம் தொடர்பாக  வெளியிட்டுள்ள அறிக்கையில் எழுத்தாளர் முருகபூபதி தொடர்ந்து குறிப்பிட்டுள்ளதாவது.

இலங்கையின் தென்மேற்குக் கரையில் இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்பில் துலங்கும் மாநகரம் நீர்கொழும்பு. வந்தோரை வாழ வைக்கும் சிங்கார நீர்கொழும்பு என இந்த ஊருக்குவந்து வாழ்ந்தவர்களினால் பெருமையுடன் பேசப்படும் நகரம்.
வரலாற்றுச் சிறப்புகளும் ஐதீக நம்பிக்கைகளையும் கொண்டிருக்கும் இந்நகரின் இந்து தமிழ்ப்பெருங்குடி மக்களிடம் மட்டுமன்றி பிற இனத்து மக்களிடமும் ஆழ்ந்த அன்பையும் அபிமானத்தையும் பெற்றிருந்த ஜெயம் விஜயரத்தினம் அவர்கள் கடந்த 18 ஆம் திகதி மறைந்துவிட்டார்.
நீர்கொழும்பின் முதல் நகரபிதாவாக இயங்கிய அமரர் எஸ்.கே. விஜயரத்தினம் ஐயாவின் இளையபுதல்வர் ஜெயரத்தினம் என்ற இயற்பெயர் கொண்டிருந்த எங்கள் 'ஜெயம் ஐயா'.
தந்தைவிட்டுச் சென்ற பலபணிகளை இந்தத் தனையன் பல ஆண்டுகாலம் தொடர்ந்து நீர்கொழும்பு வாழ் மூவின மக்களையும் கவர்ந்து அவர்களின் மனங்களில் குடியிருந்தவர்.

நீர்கொழும்பு மாநகரசபையின் மூன்றாம் வட்டாரத்தின் பிரதிநிதியாகவும் சிலகாலம் பிரதிமேயராகவும பதவிவகித்து நகரத்தின் அபிவிருத்திகளில் பங்காற்றியவர்.

அவரது தந்தையார் விஜயரத்தினம் ஐயா அவர்களினால் 1954 இல் விஜயதசமி நாளன்று ஸ்தாபிக்கப்பட்ட கல்விச்சாலைதான் இன்று கம்பஹா மாவட்டத்திலேயே ஓரேஒரு இந்துப்பாடசாலையாக விளங்கும் விஜயரத்தினம் இந்துமத்திய கல்லூரி ஆகும்.

அமரர் விஜயரத்தினம் நகர மேயராகவும் உத்தியோகப்பற்றற்ற மாவட்ட நீதிவானாகவும் பணியாற்றியவர். அவரது வழித்தோன்றல் ஜெயம் விஜயரத்தினம்,தந்தைவிட்டுச்சென்ற பல்வேறு பணிகளை தனது இறுதி மூச்சுவரையில் தொடர்ந்தார்.

நீர்கொழும்பு கடற்கரை வீதியில் அமைந்துள்ள விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் அபிவிருத்திச் சங்கம், நலன்புரிச் சங்கம் ஆகியவற்றில் அன்னாரின் ஒத்துழைப்பும் அயராதபணிகளும் விதந்து போற்றுதலுக்குரியவை.
நீர்கொழும்பு இந்துவாலிபர் சங்கத்தில் அமரர் விஜயரத்தினம் ஐயா தலைவராக இருந்த 1954 காலப்பகுதியில் அந்த மண்டபத்தில் தோன்றியதுதான் விவேகானந்தா வித்தியாலயம். காலப்போக்கில் அதன் தரம் உயர்ந்தது. அமரரின் பெயருடன் வளர்ச்சி கண்டது. அந்த வளர்ச்சியில் அமரத்துவம் எய்திவிட்ட திருமதி விஜயரத்தினம் அம்மையாருக்கும் இன்று அமரத்துவம் எய்தியுள்ள ஜெயம் ஐயாவுக்கும் பெரும் பங்குண்டு.

இந்தக் கல்லூரியின் எதிர்ப்புறமாக பன்னெடுங்காலம் எழுந்தருளி இவ்வூர் மக்களுக்கு அருள் பாலிப்பவர் ஸ்ரீசித்திவிநாயகர். இந்த ஆலயத்தின் பரிபாலனசபையின் நீண்டகால தலைவராக பணியாற்றியவர் ஜெயம் விஜயரத்தினம். இந்து இளைஞர் மன்றத்தின் தலைவராகவும் பின்னர் காப்பாளராகவும் இயங்கியவர். விஜயரத்தினம் இந்து மத்தியகல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஆயுள்கால காப்பாளராக வாழ்ந்தவர்.

நீர்கொழும்பின் மாநகரசபையின் மூன்றாம் வட்டார பிரதிநிதியாக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தவர். அரசியலுக்கும் இன,மத, மொழிபேதங்களுக்கும் அப்பால் மக்கள் தொண்டே மகேசன் தொண்டென வாழ்ந்துகாட்டி மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர்.
சுருக்கமாகச் சொல்வதாயின் அவரது மூச்சு இந்த ஊரில் பொதுச்சேவைகளில் இரண்டறக் கலந்திருந்தது.

தனது உடல் நலன் பொருட்டு பின்னாட்களில் அவர் கொழும்பில் வாழ நேரிட்டபோதிலும் தனது உடல் நலநன பொருட்படுத்தாமல் அடிக்கடி நீர்கொழும்பு வந்து ஆலய பரிபாலனசபைக் கூட்டங்களிலும் இந்து இளைஞர் மன்றம் மற்றும் விஜயரத்தினம் இந்துமத்திய கல்லூரிகளில் நடைபெறும் பொதுவைபவங்களிலும் கலந்துகொள்வார். இறுதியாக கடந்த ஜனவரி 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினமன்று நீர்கொழும்புக்கு தனது அன்புத் துணைவியாருடன் வந்து ஆலய தரிசனங்களில் ஈடுபட்ட வேளையில்,'ஸ்ரீசித்திவிநாயகர் ஆலய பரிபாலனசபைக் கூட்டத்தை ஜனவரி 20 ஆம் திகதி நடத்துங்கள். அதற்கு நிச்சயம் வருவேன்'; என்றுசபையின் பொதுச் செயலாளர் திரு. நவரட்னராஜாவிடம் சொல்லிவிட்டுச் சென்றவர், கொழும்பில் உறவினர் நண்பர்களுடன் ஒன்று கூடல் விருந்தில் 17 ஆம் திகதி கலந்துகொண்டவர். மறுநாள் அமைதியாக நிரந்தரமாக விடைபெற்றுச் சென்று அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டார்.



1 comment:

  1. அன்னாரது குடும்பமே நீர்கொழும்பு தமிழ் மக்களிடம் நல்ல மதிப்பு பெற்றவர்கள்.அவரது தந்தை நீர்கொழும்பில் ஒரு தமிழ் பாடசாலை தொடங்குவதற்கு உழைத்தவர். 1954-55 ஆண்டஆக இருக்கலாம். முதல் முதலாக ஒரு தமிழ் பாடசாலை நீர்கொழும்பிலே மேயர் விஜயரத்தினம் அவர்களால் உருவானது. கல்வி செல்வத்தை எமக்கு தந்து, இன்றும் பலரின் வாழ்விலும் தீபம் ஏற்றி வைத்தவர்.மிக மிக பெறுமதியான ஒரு கல்வி செல்வத்தை வசதி அற்ற சிறார்களுக்கு தருவதற்கு உழைத்தவர்களில் எனது தந்தை சுப்பையாவும் ஒருவர் என்பதை குறிப்பிடவேண்டும்.அமரர்களான இவர்களும், இன்னும் சிலசிலரின் முயற்சியாலுமே விவேகானந்தா பாடசாலைகள் வரிசையிலே ஒரு தமிழ் பாடசாலை நீர்கொழும்பிலேஉருவானது.
    ,,வந்தாரை வாழவைக்கும் சிங்கார நீர்கொழும்பிலே,, தமிழ் மக்களுக்கு அன்னாரது தந்தை செய்த புண்ணியத்துக்காக, விஜயரத்தினம் என்னும் அன்னாரது பெயரையே பாடசாலைக்கு பெயர் சூட்டி நன்றிக்கடன் தீர்த்தது எமது ஊர்.நீர்கொழும்பிலும் தமிழ் பேசுவார்களா , தமிழில் படித்தவர்கள் இருகிறார்களா என வாய் பிளந்து கேட்டவர்கள் இருக்கிறார்கள்! கேட்கிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள்!
    எங்களையும் தலை நிமிர வைத்த அன்னாரின் தந்தையின் வழி நடந்தவர் ஜெயம் அவர்கள். அன்னாருக்கு எம் அஞ்சலியை செலுத்துகிறோம் .

    ReplyDelete