பேதங்கள்
பேசுவதன் காரணமாக இன மோதல்கள் ஏற்படும். இன ரீதியான போராட்டக் குழுக்கள் உருவாகும்.
வேறுபாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்து எமது மதத்தை பின்பற்றும் அதேவேளை ஏனைய மதத்தவர்களையும்
நாங்கள் மதித்து நடக்க வேண்டும். அளுத்கமையில் அன்று ஒரு சில பௌத்த தேரர்கள் முன்னின்று
முஸ்லிம்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தினார்கள். அதற்கு அன்றைய ஆட்சியிலிருந்த சில தலைவர்களும்
ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
கூறினார்.
கம்பஹா
மாவட்ட 'தேசிய தைப்பொங்கல் விழா நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில்
கடந்த வெள்ளிக்கிழமை (22.01.2016) நடைபெற்றபோது
அதில் பிரதம அதிதியாக
கலந்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அமைச்சர்களான
ஜோன் அமரதுங்க, சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே
, முன்னாள் பிரதி அமைச்சர் பண்டு பண்டார நாயக்க,
மேல் மாகாண சபை உறுப்பினர் சகாவுல்லா, கலாநிதி ராதிகா குமாசுவாமி, நீர்கொழும்பு
வலய கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், சர்வமத தலைவர்கள், நீர்கொழும்பு
பிரதேச செயலாளர், நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள், உட்பட பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
நிகழ்வில்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
இன்று
முக்கியமானவொரு நாளாகும். ஒரு இனத்திற்கு உரித்தான நிகழ்வொன்றை சகல இன மக்களும் இணைந்து கலந்து கொண்டாடுவது முக்கியமானதாகும். இந்த வருடம் நான்கு மதங்களுக்கும் இரண்டு உற்சவங்கள்
வீதம் எட்டு நிகழ்வுகள் தேசிய ரீதியில் நடத்தப்படும். இந்த நாடு சகலருக்கும் சொந்தமானதாகும்.
நாங்கள் எல்லோரும் இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளோம். ஒரு சிலர் இந்த
நாடு பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்று கூறுகிறார்கள். இவ்வாறு இன பேதம் பேசுவோர்
சகல இனங்களிலும் இருக்கிறார்கள்.
நான்
கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்றவள். அன்று எமது பாடசாலையில் சகல இன மாணவர்களும்
கல்வி கற்றனர். நாங்கள் வேறுபாடு காட்டவில்லை. சகல இனத்தவர்களையும் சேர்ந்தவர்கள் எனது
நண்பர்களாக உள்ளனர். இன்றும் நான் அவர்களுடன் தொடர்பில் உள்ளேன்.
பௌத்த
மத்திற்கு முன்னுரிமை வழங்கும் பல பாடசாலைகள் எமது நாட்டில் உள்ளன. கொழும்பு ஆனந்த
கல்லூரி, நாலந்த கல்லூரி, விசாகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகள் அவ்வாறு உருவாக்கப்பட்டவை.
வெளிநாட்டவர்களான கத்தோலிக்கர்களே அதனை உருவாக்கினர். இந்த பாடசாலைகளில் சகல இன மாணவர்களும்
அன்று கல்வி கற்றனர். ஆனால், இன்று இதுபோன்ற பாடசாலைகளில் பௌத்தர்கள் அல்லாத மாணவர்களை
சேர்துக்கொள்ளாத நிலை தற்போது காணப்படுகிறது.
பௌத்த மதம் இவ்வாறு போதிக்கவில்லை. இதுபோன்ற பாடசாலைகளில் கல்வி கற்ற மாணவர்கள் ஏனைய
சமயத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் ஒருபோதும்
பழகியது கிடையாது. தமிழ் மொழிப் பாடசாலைகளிலும் இதுவே நடந்தது.
பேதங்கள்
பேசுவதன் காரணமாக இன மோதல்கள் ஏற்படும். இன ரீதியான போராட்டக் குழுக்கள் உருவாகும்.
வேறுபாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்து எமது மதத்தை பின்பற்றும் அதேவேளை, ஏனைய மதத்தவர்களையும்
நாங்கள் மதித்து நடக்க வேண்டும். எமது ஜனாதிபதியும் பிரதமரும் கட்சி ரீதியில் வேறுபட்டவர்கள்.
ஆனால் ஒன்றாக இணைந்து செயற்படுகிறார்கள். எனவே பொது மக்களும் ஒன்றிணைந்து சகோதரத்துவத்துடன்
வாழ வேண்டும்.
இந்த ஆட்சியை நல்லாட்சிப் பயணத்தில் தொடர்ந்து கொண்டு
செல்ல வேண்டும். பேச்சு சுதந்திரம், எழுத்து, கருத்து சுதந்திரம், நீதி, சட்டம் என்பவற்றை
உறுதிப்படுத்தும் ஆட்சியே நல்லாட்சியாகும். ஆட்சியில் இருப்பவர்கள் திருடர்களாக இருக்க முடியாது. அவர்கள் மக்களின் சொத்துக்களை
கொள்ளையடிக்க முடியாது. இதுதான் நல்லாட்சியாகும். மக்கள் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படாவிட்டால்
நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என்றார்.
இந்நிகழ்வில்
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு, விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில்
கடந்த வருடம் பொதுப் பரீட்சைகளில் சிறப்பாக
சித்தியடைந்த மாணவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால்
பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி அதிபர் புவனேஸ்வரராஜா
முன்னாள் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.
No comments:
Post a Comment