Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, June 2, 2016

செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் பிரடி கமகே மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் சம்பவம்


ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக் குழுவின் அமைப்பாளரும், 'மீபுர' இணையத்தளத்தின் ஆசிரியரும், ஊடகவியலாளரும் ;  பிரபல  மனித உரிமை செயற்பாட்டாளருமான  பிரடி கமகே இன்று வியாழக்கிழமை  நண்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த   இனந்தெரியாத இரண்டு நபர்களால் நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் வைத்து  தாக்கப்பட்டு நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு மாநகர சபையின் இம்மாத அமர்வை செய்தி சேகரித்துவிட்டு தனது காரில் ஏற முற்பட்ட வேளையில் முழுமையாக தலைக் கவசம் அணிந்த மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால்
தடிகளால் தலையில் தாக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத அந்த இரு நபர்களும் 
தடிகளை கொண்டு பலமான முறையில்  ஊடகவியலாளர் பிரடி கமகேயின் தலைப் பகுதியில் தாக்கியுள்ளனர்.  திடீர் தாக்குதலை அடுத்து  பிரடி கமகே அங்கிருந்து தப்பியோடி நீர்கொழும்பு மேயரின் காரியாலயத்திற்குள் சென்றுள்ளார்.
இதனை அடுத்து சக ஊடகவியலாளர்களும் நண்பர்களாலும் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்னதாக இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



நீர்கொழும்பு  பிரதி மேயர் தயான் லான்ஸாவின் ஆட்களே தன்மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக தாம் சந்தேகிப்பதாகவும், இச்சம்பவம் தொடர்பாக    பிரதி மேயருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டிருப்பதாகவும்  பிரடி கமகே ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதேவேளை, இன்று மாலை பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் குணசேகர ஆகியோர் ஊடகவியலாளர் பிரடி கமகேயை நீர்கொழும்பு  வைத்தியசாலைக்கு வந்து பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அங்கு ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கிணங்க  ஊடகவியலாளர் பிரடி கமகேயை நலன் தொடர்பாக பார்வையிட வந்துள்ளோம். இச்சம்பவம் தொடர்பாக  தீவிர விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள்  கைது செய்யப்படுவார்கள். எமது நல்லாட்சியின் கீழ் எந்த ஊடகவியலாளர் மீதும் தாக்குதல் நடத்த இடமளிக்கப்படமாட்டாது. ஊடகவியலாளர் பிரடி கமகே நீர்கொழும்பு நகரில் இடம்பெற்ற , இடம்பெறுகின்ற  பல்வேறு ஊழல் விடயங்கள் , சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக தனது ஊடகத்தின் மூலமாக வெளிக்கொண்டு வந்து மக்கள் சேவை செய்பவராவார் என்றார்.

செய்தி - எம்.இஸட்.ஷாஜஹான்

No comments:

Post a Comment