பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்காவுக்கு
எதிராக பிரதி அமைச்சர் நிமல் லான்ஸா தொடர்ந்த
அவதூறு வழக்கு நேற்று புதன்கிழமை (13-7-2016) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம்
திகதி வரை நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த ஒத்திவைத்தார்.
கடந்த பொதுத் தேர்தலின் போது இடம்பெற்ற பொதுக்
கூட்டமொன்றின் போது பிரதி அமைச்சர் ரஞ்சன்
ராமநாயக்கா பிரதி அமைச்சர் நிமல் லான்ஸாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்
அவதூறாக பேசியதாக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா ஆஜராகவில்லை என அவரது சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா கூட்டத்தில் பேசிய ஒலிப்பதிவு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த
உரையில் மக்கள் நலன் சார்ந்த விடயம் உள்ளடங்கியுள்ளதாகவும், எனவே இந்த ஒரு நபருக்கும்
அபகீர்த்தி ஏற்படும் வகையிலான விடயம் அதில் உள்ளடங்கவில்லை எனவும் பிரதி அமைச்சர் ரஞ்சன்
ராமநாயக்கா சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களின் பின்னர் இந்த வழக்கை செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதிக்கு
நீர்கொழும்பு பிரதான நீதவான் ஒத்திவைத்தார்.

No comments:
Post a Comment