நீர்கொழும்பு
நகரில் உள்ள பிரபல பௌத்த பாடசாலை ஒன்றின் உயர்தர
வகுப்பு மாணவனை தாக்கி வாகனத்தில் கடத்திச்
செல்ல முயற்சி செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரையும் இந்த மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த
வியாழக்கிழமை (20) உத்தரவிட்டதோடு,
அன்றைய தினம் சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு
உத்தரவிட்டார்.
தினேஸ்
ஜிஹான், மஞ்சுள புஸ்பகுமார, தசுன் சமீர, கயான் சஞ்சீவ, சுசித்த பிரசன்ன த சில்வா ஆகியோரே
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவர்களாவர்.
கடந்த
புதன்கிழமை (19) நீர்கொழும்பு ஹரிச்சந்திர தேசிய பாடசாலை முன்பாக பாடசாலை முடிவடைந்து வீடு செல்வதற்காக காத்திருந்த மாணவன்
வான் ஒன்றில் கடத்திச் செல்லப்படும் போது வீதி போக்குவரத்து சேவையில் பணியில்
இருந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் பிறிதொரு மாணவன் அறிவித்ததை அடுத்து அந்த பொலிஸ் உத்தியோகத்தரால்
மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று காப்பாற்றப்பட்டார். தாக்குதலுக்கு உள்ளான மாணவர்
நீர்கொழும்பு வைத்தியசாலையில் பின்னர் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.
நீர்கொழும்பு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு மேலும் இருவரை
கைது செய்தனர்.

No comments:
Post a Comment