2001 ஆம் ஆண்டு அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர்கள் தேர்தல் பிரசாரத்திற்காக ஊர்வலமாக சென்றபோது முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன பயணித்த வாகனம் நபர் ஒருவர் மீது மோதி மரணம் சம்பவித்தமை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்னவை மேல் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி பியசீலி விக்கரமசிங்க மத்துரட்ட கடும் நிபந்தனைகளுடன் 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா ஐந்து இலட்சம் ரூபா கொண்ட இரு நபர்களின் சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய (7-11-2016) உத்தரவிட்டார்.
பிரதிவாதி நீதிமன்ற அனுமதியில்லாமல் வெளிநாடு செல்வதற்கு தடைவிதித்த நீதவான், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை தினத்தில் நீர்;கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.
2001 ஆம் ஆண்டு நீர்கொழம்பில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன பயணித்த வாகனத்தில் மோதி ஒருவர் மரணமானதுடன் மேலும் இருவர் காயமடைந்தனர். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட பிரதி அமைச்சர் தொடர்ந்து இடம்பெற்ற வழக்குகளின் போது நீதிமன்றத்தில் ஆஜராகாததை அடுத்து திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன கடந்த மாதம் 24 ஆம் திகதி நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார்.
இந்நிலையில் சரத்குமார குணரத்னவுக்கு பிணை வழங்குமாறு கோரி மேல் நீதிமன்றத்தில் கடந்த 3 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த நீதவான் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment