Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, March 11, 2017

நீர்கொழும்பு போலவலான பிரதான நீர்த்தாங்கியிலிருந்து கட்டானை பிரதேசத்திற்கு குடி நீரை வழங்கும் வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

நீர்கொழும்பு போலவலானையில் அமைந்துள்ள  பிரதான நீர்த்தாங்கியிலிருந்து (Water Tank)  கட்டானை பிரதேசத்திற்கு குடி நீரை வழங்கும் வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  இன்று  ஞாயிற்றுக்கிழமை (12)  முற்பகல் போலவலானை தேவாலயம் முன்பாக நீர்கொழம்பு பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டவர்கள் 'நீர்கொழும்பு தண்ணீரை திருட வேண்டாம், எங்களது குடிநீரத் தேவையை குறைக்க வேண்டாம், நீர்கொழும்பில் வருங்கால சந்ததிக்கு நீர் வழங்க முடியாமல் போகும், எங்களது தண்ணீரை எங்களுக்குத் தா, கட்டானையில் திட்டமிடல் இல்லை: நாங்கள் என்ன செய்வது? ' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.

ஆர்ப்பாடத்தில் பங்குபற்றிய நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான ரொயிஸ் விஜித்த பெர்னாந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,
கட்டானை பிரதேசத்திற்கு குடி நீரை வழங்கும் வேலைத்திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அங்கு வசிப்பவர்களும் எமது மக்களே ஆவர். கட்டானை பிரதேச மக்களுக்கு நீர்த் தேவை உள்ளது.  ஆயினும்,  1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிர்மானிக்கப்பட்ட போலவலானை நீர்த்தாங்கியிலிருந்து நீரை வழங்குவதற்கு அனுமதிக்க முடியாது. போலவலானை நீர்த்தாங்கிக்கு 1000 கனமீற்றர் நீர் கிடைக்கிறது. அதில் 800 கனமீற்றர் தினமும் பயன்படுத்தப்படுகிறது. எஞ்சிய 200 கனமீற்றர் நீரை கட்டானையில் உள்ள அக்கரபனஹ, உளுஅம்பலம, கட்டுவபிட்டிய ஆகிய  பிரதேசங்களுக்கு விநியோகிப்பதற்கு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே  குடி நீர் வழங்கும்  வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளார். இது தவறாகும். நீர்கொழும்பில் புதிதாக வீடுகள் நிரமானிக்கப்படுகின்றன. நாளுக்கு நாள் நீர்த்தேவை அதிகரித்துக் கொண்டு செல்கிறது.





 கட்டானையில்  240 கிலோமீற்றர் தூரத்திற்கு குடிநீர்வழங்கும் வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டு அதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. இந்நிலையில் நீர்கொழும்பு தொகுதியில் உள்ள மக்கள் பயன்படுத்தும் நீரை  அங்கு வழங்க முடியாது. நல்லாட்சியை நாங்களே அமைத்தோம்.  காக்கையின் கூட்டில் குயில் முட்டையிட்ட கதையாக நீர்கொழும்பு மக்களுக்குரிய நீரை அங்கு வழங்குவதற்கே நாம் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே  தனது அமைச்சு மூலமாக கட்டானை பிரதேசத்திற்கு குடிநீர் வழங்குவதற்கு சிறந்த திட்டமொன்றை மேற்கொண்டு  அங்கு நீர்முகாமைத்துவத்தைப் பேண வேண்டும் என்றார்.

; போலவலானை மினுவாங்கொட வீதியில் கட்டானை பிரதேசத்திற்கு போலவலானை நீர்தாங்கியிலிருந்து நீர்வழங்கும் வேலைத்திட்டத்திற்காக குழாய்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த நீர்வழங்கல் சபையின் ஊழியர்களை ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டவர்கள் தடுத்து நிறுத்தினர். அதன்காரணமாக அந்த ஊழியர்கள்  தமது வேலைகளை நிறுத்தியதுடன் வாகனங்களையும் எடுத்துச் சென்றனர்.


செய்தியும் படங்களும். – எம். இஸட். ஷாஜஹான்


No comments:

Post a Comment