நீர்கொழும்பில்
பல பகுதிகளிலும் போதைப் பொருள் வர்த்தகத்திற்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை (31) முற்பகல்
எதிர்ப்பு ஆர்பாட்டம் மற்றும் பேரணி இடம்பெற்றது.
நீர்கொழும்பு
பெரியதெருவில் (பிரதான வீதி) அமைந்துள்ள புனித
சென் மேரிஸ் தேவாலயத்தில் அருட்தந்தை கிளமன் ரொஸைரோ தலைமையில் மாபெரும் எதிர்ப்பு பேரணியும்
ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.
புனித சென் மேரிஸ் தேவாலயத்தில் இருந்து நீர்கொழும்பு பிரதான வீதி வழியாக பேரணியாக சென்றவர்கள்
கிறீன்ஸ் வீதி வழியாக
நகரின் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர். இதன்போது நகரில் உள்ள சில தேவாலயங்களில் இருந்து வந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்துடன்
இணைந்து கொண்டனர். அத்துடன் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் சார்பில் பள்ளிவாசலின்
பேஸ் இமாம் சல்மான் மௌலவியின் தலைமையில் முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டனர். பாடசாலை
மாணவர்கள், சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், பொது மக்கள் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில்
பங்குபற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில்
பங்குபற்றியோர் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் எதிர்ப்பு
கோசங்களையும் எழுப்பினர். பின்னர் பேரணியாக மீண்டும் தேவாலயத்தைச் சென்றடைந்தனர்.
இதேவேளை,
தளுபத்தை வேளாங்கன்னி மாதா தேவாலயத்தின் சார்பில்
ஏற்பாடு செய்யப்;பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பல்லன்சேனை வீதியில் நடைபெற்றது. இதன்போது முன்னாள் பிரதி அமைச்சரும் பாராளுமன்ற
உறுப்பினருமான நிமல் லான்ஸாவின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வரிசையாக
நின்றமை குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டோர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment