இலங்கையில் மதச் சிறுபான்மை
சமூகங்களுக்கு எதிராக, அங்கு சக மதங்களை மதிக்கும் சகிப்பு மனப்பான்மை குறைந்துவரும்
போக்கு அண்மைக்காலமாக தீவிரமடைந்து வருவதாக அக்கறைகொண்ட பிரஜைகள் என்ற குழுவினர்
அறிக்கையொன்றில் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
தேசிய சமாதான கவுன்சில், மாற்றுக்
கொள்கைகளுக்கான நிலையம், விழுது மனிதவள மேம்பாட்டு நிறுவனம், தாய்மாரும் புதல்வியரும் அமைப்பு, போரினால்
பாதிக்கபட்ட பெண்களுக்கான அமைப்பு,
காணாமல்போகச் செய்யப்பட்டவர்களின்
குடும்பங்களுக்கான அமைப்பு என பல அமைப்புகளுடன், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும்
சட்டத்தரணிகள் சிலரும் இன்னும் பல சிவில் சமூக பிரதிநிதிகளும் அடங்கலாக 200க்கும் அதிகமான கையொப்பங்களுடன் இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது.
தம்புள்ளையில் கடந்த 60 ஆண்டுகளாக சட்ட ஆவணங்களுடன் இயங்கிவருகின்ற பள்ளிவாசலையும் அந்தப்
பகுதியில் இருக்கின்ற இந்துக் கோவிலையும் அகற்ற வேண்டும் என்று நடத்தப்பட்ட
போராட்டங்களையும், பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை நிறுத்தப்பட்டமையையும்
சுட்டிக்காட்டியிருக்கின்ற அந்த அறிக்கை, சட்டம் ஒழுங்கைப் பேண வேண்டியவர்கள்
உரிய நடவடிக்கை எடுக்காது போனமை மனவருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் போருக்குப் பின்னரான
சூழலில், இனச் சிறுபான்மை சமூகங்களுக்கு அநீதிகள் இழைப்படாமல் இருப்பதை உறுதி
செய்ய வேண்டும் என்றும் அக்கறைகொண்ட பிரஜைகள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
தம்புள்ளை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட
சமூகத்தின் கருத்துக்கள் பெறப்படாமலேயே, மூன்று மாதங்களுக்குள் அங்குள்ள
பள்ளிவாசலை அகற்றி வேறிடத்தில் அமைக்க வேண்டும் என்று
தீர்மானிக்கப்பட்டிருப்பதையும் அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
தொடர் சம்பவங்கள்
அனுராதபுரத்தில் முஸ்லிம் தர்கா கடந்த
ஆண்டில் தகர்க்கப்பட்டமை, அஷ்ரப் நகரில் முஸ்லிம் மக்களின் சொந்தக் காணிகளை இராணுவம்
எடுத்துக்கொண்டுள்ளமை, இலங்கைத்துறை முகத்துவாரப் பகுதியை லங்கா பட்டுண என்று சிங்களத்தில்
பெயர்மாற்றம் செய்து, அங்கிருந்த இந்துமத சிலையை அகற்றிவிட்டு புத்தர் சிலையை
நிறுவியுள்ளமை, களுத்துறையில் கடந்த ஆண்டில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலமொன்று
தாக்கப்பட்டமை, அம்பலங்கொடையில் திருச்சபை தாக்கப்பட்டமை, களுத்துறையில்
கிறிஸ்தவ போதகர் ஒருவர் தாக்கப்பட்டமை உட்பட சம்பவங்களை அறிக்கை அதிகாரிகளின்
கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
மதச் சுதந்திரத்தை பாதிக்கும்
விதத்தில் நிலங்களை கையகப்படுத்த அனுமதிக்கும் நாடு நகர திட்டமிடல் சட்டத்தைக்
கொண்டுவர அரசு முயற்சிக்கின்றமை நிலைமையை இன்னும் மோசமாக்குவதாகவும் இவ்வாறான
செயற்பாடுகள் இனச்சிறுபான்மை சமூகங்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வை
ஏற்படுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள சமூக ஆர்வலர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.
பல்கலாசார சமூக பண்புகள் காணப்படும்
இலங்கையில் எங்குவேண்டுமானாலும் மத சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான உரிமை
அரசியலமைப்பில் உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ளமையை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போருக்குப் பின்னரான இலங்கையில் மத
ரீதியான சகிப்புத் தன்மை குறைந்து வருகின்றமையை உணர்ந்து அரச அதிகாரிகள், சிறுபான்மை
சமூகங்கள் பாதுகாப்பாக உணர்வதை உறுதிசெய்யவும் அவர்கள் அரச நிறுவனங்கள் மீது
நம்பிக்கை வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ள அக்கறை
கொண்ட பிரஜைகள் குழு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை கேட்டுக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment