நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தில் நான் செயலாளராக இருந்த
காலப்பகுதியில் ஒரு தடவை நடந்த பௌர்ணமி விழாவில் உள்ளுர் கலைஞர்களுக்கு களம் வழங்கினோம். மெல்லிசைப்பாடல்கள் பாடுவதில் ஆற்றலும் குரல்வளமும் இருந்த தமது தம்பியை
பாடவைக்குமாறு அவரது அண்ணன்மார் காளிதாசன், ரட்ணராஜா
ஆகியோர் கேட்டுக்கொண்டு, மன்ற மண்டபத்திற்கு அவரை அழைத்துவந்தனர். அப்பொழுது அவருக்கு 15 அல்லது 16 வயதுதான் இருக்கும்.
அவர் பெயர்
விஜயரத்தினம். எனக்கு அவரை ஏற்கனவே நன்கு தெரியும். 1966 காலப்பகுதியில் எனது அக்காவிடம் மாலை
வேளைகளில் பாடம் படிக்கவருபவர். அக்கா
திருமணமாகி வெளியூர் செல்லும் வரையில் விஜயரத்தினம் எங்கள் வீட்டுக்கு வந்து போய்க்கொண்டிருந்தவர்.
அப்பொழுதே அக்காலத்தில் பிரபலமாகியிருந்த சினிமாப்பாடல்களை அவர் முணுமுணுப்பதை அவதானித்துள்ளேன்.
அன்று பௌர்ணமி விழா மேடையில் அவர் பாடிய
ராசாத்தி உன்னை காணாமல் நெஞ்சு காற்றாடி போலாடுது.... என்ற பாடலை மீண்டும்; ஒருமுறை பாடுமாறு மண்டபத்தில் திரண்டிருந்தவர்கள் கேட்டார்கள். அவரும்
மீண்டும் ஒருமுறை பாடினார்.
அந்த நிகழ்ச்சிக்குப்பின்னர் ஒரு சிறுமி ஆயர்பாடி
மாளிகையில் தாய்மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன்
தூங்குகிறான் என்ற பாடலுக்கு அபிநயம் பிடித்து ஆடினாள். பின்னணியில் தமது இனிய குரலில் அந்தப் பாடலைப்பாடினார் விஜயரத்தினம்.
இவ்வாறு நீர்கொழும்பு தமிழ் மக்களிடத்தில் மட்டுமல்லாது இலங்கையிலும் தமிழ்நாட்டிலும்
பெரும் புகழ்பெற்ற பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சிகளிலும் விஜயரத்தினத்தின் குரல் ரசிகர்களை
பரவசப்படுத்தியது.
இவ்வாறு தமது இனிய குரலினால் எங்களையெல்லாம் மயக்கிய இந்தக்கலைஞர் சமீபத்தில் நீர்கொழும்பில் மறைந்துவிட்டார் என்ற செய்தி வந்தடைந்தது.
இவரது அண்ணன் ரட்ணராஜா சில நண்பர்களுடன் இணைந்து கதிரவன்
நாடக மன்றம் என்ற அமைப்பையும் பொதுப்பணி மன்றம் என்ற சமூகப்பணி அமைப்பையும் உருவாக்கியபொழுது அண்ணனுக்கு பக்கத்துணையாக விளங்கிய விஜயரத்தினம், அக்காலத்தில் இலங்கை வானொலி வர்த்தக சேவையில் பெரும் வரவேற்பையும் புகழையும்
பெற்றிருந்த பாட்டுக்குப்பாட்டு தொடர்போட்டிகளிலும்
கலந்துகொண்டு வெற்றியீட்டினார்.
இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் தமிழர் புகலிடம் பெற்ற நாடுகளிலும் தமது மதுரமான குரலினால் ரசிகர்களையும் நேயர்களையும் அரவணைத்த பி.எச்.அப்துல்ஹமீட் வாரம்தோறும் நடத்திவந்த
பாட்டுக்குப்பாட்டு போட்டி நிகழ்ச்சி அன்றைய காலப்பகுதியில் தற்கால
சுப்பர் சிங்கருக்கு நிகரானது.
தொலைக்காட்சியின் வருகைக்கு முன்னர் இலங்கையிலும் தமிழகத்திலும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது இலங்கை வானொலியின் வர்த்தகசேவை. அதிலும் வார விடுமுறையில் ஒலிபரப்பாகும் பாட்டுக்குப்பாட்டு நேயர்களை பெரிதும் கவர்ந்தது.
இலக்கணச்சுத்தமாகப்பேசும் அப்துல்ஹமீட், ஒரு தமிழ் சினிமாப்பாடலை ஒருவரைக்கொண்டு பாடவைத்துவிட்டு, திடீரென்று
அந்தப்பாடலை நிறுத்தச்செய்து எந்த எழுத்தில் அந்தப்பாடல் நிறுத்தப்பட்டதோ அந்த எழுத்திலிருந்து மற்றுமொரு பாடலை மற்றும் ஒருவரைக்கொண்டு பாடவைப்பார். இந்தப்போட்டி வெகு சுவாரஸ்யமாக நடக்கும்.
இந்த பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியை கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்த ஒரு பிரபல நகை மாளிகை நடத்திக்கொண்டிருந்தது. அப்துல்ஹமீட் ஊர்கள் தோறும் தமது பரிவாரங்களுடன் சென்று நடத்தி. வானொலிக்கு சேர்ப்பித்து வான் அலைகளில் பரப்புவார்.
இந்தப்பாட்டுக்கு பாட்டு
நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிச்சுற்றுப்போட்டி வரையில் தொடர்ந்துவந்த எங்கள் ஊர் விஜயரத்தினம்,
கொழும்பு சுகததாஸ ஸ்ரேடியத்தின் உள்ளரங்கில் நடந்த இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றார்.
அக்காலப்பகுதியில் தொலைக்காட்சி இலங்கைக்கு அறிமுகமானது.
பாடகர் விஜயரத்தினத்திற்கு பரிசாக ஒரு தொலைக்காட்சிப்பெட்டி கிடைத்தது.
விஜயரத்தினம் தனது அண்ணன் ரட்ணராஜாவுடன் இணைந்து நடித்த
சில நாடகங்களை பின்னாளில் கொழும்பில் கலைஞர்கள் ஹெலன்குமாரி - ராஜசேகரன் தம்பதியரும் தொலைக்காட்சி நாடகமாக்கியிருக்கின்றனர்.
எமது நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம், மற்றும் விஜயரத்தினம்
இந்து மத்திய கல்லூரி பழையமாணவர் மன்றம் ஆகியன நடத்திய பல கலைநிகழ்ச்சிகளிலும் விஜயரத்தினம் பங்கேற்றுள்ளார்.
எங்கள் மத்தியில் வாழ்ந்து தமது இனிய குரல்வளத்தினால் எங்கள் ஊருக்குப்பெருமை சேர்த்த மெல்லிசைப்பாடகர் விஜயரத்தினம் நிரந்தரமாக மௌனமாகிவிட்டார்.
அவருக்கு எமது அஞ்சலி.
----0----
letchumananm@gmail.com


No comments:
Post a Comment