Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, November 18, 2015

நீர்கொழும்பு நகரில் முச்சக்கர வண்டிகளை திருடி வந்த நபர் கைது: 40 இலட்சம் ரூபா பெறுமதியான உதிரிப்பாகங்கள் மீட்பு: மேலும் சிலரைத் தேடி வலைவிரிப்பு


நீர்கொழும்பு நகரில்  பிரதான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் முச்சக்கரவண்டிகளை திருடி  அவற்றை விற்பனை செய்து வந்த நபர்  ஒருவரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன்  திருடப்பட்ட முச்சக்கர வண்டிகளின் உதிரிப்பாகங்கள் மற்றும் முக்கிய பாகங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இதன் பெறுமதி 40 இலட்சம் ரூபா என பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.
 போலவலான, ஜனஜயகம பிரதேசத்தைச் சேர்ந்த  கங்கானம்லாகே நுவன் சமிர உயாங்க (30 வயது) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே  கைது செய்யபட்டுள்ள சந்தேக நபராவார். சந்தேக நபர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தொழில் நுட்ப உத்தியோகத்தராக வேலை செய்பவராவார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை மற்றம்  நீர்கொழும்பு சிறைச்சாலை  முன்பாகவும், ஏத்துக்கால  கடற்கரைப் பூங்காவிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் முச்சக்கரவண்டிகளை சந்தேக நபர் கடத்திச் சென்று  ஜா- எல பிரதேசத்தில் உக்குவா என்ற நபரிடம் கொடுத்துள்ளார். உக்குவா என்ற நபர்  சந்தேக நபருக்கு 25 ஆயிரம் ரூபா பணத்தைக்  அதற்காகக் கொடுத்துள்ளார். இவ்வாறு 16 முச்சக்கரவண்டிகளை கைது செய்யப்பட்டள்ள நபர் கடத்திச் சென்று விற்பனை செய்துள்ளார்.
உக்குவா என்ற நபர்  திருடப்பட்ட  முச்சக்கரவண்டிகளை கராஜ் சுதா என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். பின்னர் அந்த முச்சக்கரவண்டிகளின் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன.

பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து சந்தேக நபரை கைது செய்த பொலிஸார், 40 இலட்சம் ரூபா பெறுமதியான உதிரிப்பாகங்களை  மீட்டுள்ளனர்.  இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரைத் தேடி வலைவிரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்..

No comments:

Post a Comment