Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, January 30, 2016

வத்தளை ஓலியமுல்லைப் பிரதேசத்தில் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி புதிய தமிழ் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு வைபவம் இடம்பெறும் - மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ஸ

வத்தளை தமிழ் மக்களின் நீண்ட நாள் கனவான   வத்தளை பிரதேசத்தில் தமிழ்  பாடசாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கான கனவு நனவாகப் போவதாகவும், வத்தளை ஒலியமுல்லைப் பிரதேசத்தில் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி   புதிய தமிழ் பாடசாலைக்கான அடிக்கல்நாட்டு வைபவம் இடம்பெறும் எனவும் மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ஸ  இன்று சனிக்கிழமை (30) தெரிவித்தார்.
கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் மேல்மாகாண தமிழ் மொழிமூல பாடசாலை அதிபர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட 'மேல் மாகாண தமிழ் மொழி பாடசாலைகளின்
அபிவிருத்தி தொடர்பான மாநாட்டில்' கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
 இந்நிகழ்வை மேல்மாகாண ஆளுனர் லோகேஸ்வரனின் பணிப்பின் பேரில் மேல் மாகாண கல்வித் திணைக்களமும் மேல் மாகாண கல்வி அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
 மேல்மாகாண ஆளுனர் லோகேஸ்வரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய சகவாழ்வு , கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழி அமைச்சர் மனோ கணேசன், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி,  பாராளுமன்ற உறுப்பினரான முஜீபுர் ரஹ்மான், மேல் மாகாண சபை உறுப்பினர்களான சன்குகவரதன், குருசாமி, ஹர்சாத் நிசாம்தீன், சகாவுல்லாஹ், ஷாபி ரஹீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட செயலாளர் சசிகுமார்,  மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.ஜி. விஜேபந்து, மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் விமல் குணரத்ன, மேல் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு பொறுப்பான  கல்விப் பணிப்பாளர்களான இன்ஸஹார், உதய குமார், எம். அலவி, வலய கல்விப் பணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ஸ தொடர்ந்து உரையாற்றுகையில், வத்தளை தமிழ் வித்தியாலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி இடம்பெறும் எனவும், இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க கலந்து கொள்வார் எனவும் தெரிவித்தார்.
மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.ஜி. விஜேபந்து உரையாற்றும்போது, வத்தளை தமிழ் வித்தியாலயம் அமைப்பதற்கான  ஆரம்ப கட்டச் செலவாக மூன்று மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,  இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் மனோகணேசன் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.


 செய்தியும் படங்களும் - எம்.இஸட்.ஷாஜஹான்


No comments:

Post a Comment