Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, February 1, 2016

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளையும் உபகரணங்களையும் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கியதற்கு எதிராக நீர்கொழும்பில் மீனவர்கள் மறியல் போராட்டம்

தடைசெய்யப்பட்ட மீன் பிடி வலைகளையும் உபகரணங்களையும் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் மீண்டும் அனுமதி அளித்ததற்கு எதிராக இன்று திங்கட்கிழமை மீனவர்கள் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நீர்கொழும்பு நகரில் நடத்தினர்.
நீர்கொழும்பு கடற்கரைத் தெரு சாந்த செபஸ்தியன் தேவாலயத்திலிருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நகர மத்தியினூடாக நீர்கொழும்பு மாநகர சபை முன்பாக வந்தடைந்து நீர்கொழும்பு - சிலாபம் வீதியை மறித்து இடம்பெற்றது.
நீர்கொழும்பு முதல் திருகோணமலை வரையான மீன்பிடிப் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி  மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினர்.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களைக் கொண்டு மீன் பிடிப்பது இதற்கு முன்னர் அனுமதி மறுக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது கடற்றொழில் அமைச்சர் அதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதன் காரணமாக சிறிய மீனினங்களின் பெருக்கம் குறையும் எனவும், கடற்தாவரங்கள் அழியும் எனவும் மீன்களின் உற்பத்தி குறைவதாலும் மீன்கள் அதிக அளவில் இறப்பதாலும் மீன்களின் விலைகள் அதிகரிக்கும் எனவும், சிறியளவில் மீன் பிடித்துறையில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் அதிகம் பாதிக்கப்படுவர் எனவும், மீனவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.






இதுதொடர்பாக கடற்றொழில் அமைச்சருடன் அதற்கு முன்னர் பல தடைவைகள் பேச்சுவார்த்தை நடத்திய போதும் உரிய பதில் கிடைக்கவில்லை என மீனவ சங்கத் தலைவர் ஒருவர் தெரிவித்தார். இன்றை போராட்டத்திற்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் சாகும் வரையான உண்ணா விரதப் போராட்டமாக இது மாறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக வீதி போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.  பொலிஸார் மாற்று வீதிகளினூடாக வாகனங்களை திசை திருப்பி அனுப்பினர். இதன் காரணமாக  வாகனங்களில் பயணிப்போரும் பொது மக்களும் பெரிதும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் ஆறு மணித்தியாலம் வரை வீதிப் போக்குவரத்தை தடைசெய்தனர். அத்துடன் ரயில் போக்குவரத்து சேவையும் சில மணி நேரங்கள் பாதிக்கப்பட்டது.




-எம்.இஸட்.ஷாஜஹான்

No comments:

Post a Comment