Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, May 14, 2016

விசேட வைத்திய நிபுணராக நடித்து திருடிய பணத்தில் சுகபோக வாழ்க்கை நடத்திய நபர் கட்டுநாயக்கா பொலிஸாரினால் கைது

விசேட வைத்திய நிபுணர் என்று நடித்து பல்வேறு நபர்களிடம் பல இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்து சுகபோக வாழ்க்கை  நடத்திவந்த சந்தேக நபர் ஒருவரை நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  கடந்த வெள்ளிக்கிழமை (13) உத்தரவிட்டார்.
திவுலபிட்டிய, ரோயல்பார்க், பலகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ராஜபக்ஸ கெதர உபாலி ரத்நாயக்க என்ற (43 வயது) சந்தேக நபரே விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவிடப்பட்டவராவார். சந்தேக நபரை கட்டுநாயக்க பொலிஸார் கடந்த வியாழக்கிழமை
(12) கைது செய்துள்ளனர். 
விசேட வைத்திய நிபுணர் என்று தன்னை இனங்காட்டிக்கொள்ளும்  சந்தேக நபர் பல்வேறு வியாபார நிலையங்களுக்குச் சென்று அங்குள்ளவர்களுடன் நெருங்கிப்பழகி அவர்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வதுடன்; அந்த நிறுவனங்களில் சேவையையும் பெற்றுக்கொள்வார். பின்னர்  பல்வேறு முறைகளை பயன்படுத்தி அந்த வியாபார நிலையங்களின்  பணம், காசோலைப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றை மோசடியான வகையில் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெவமொட்டாவ, பில்லேவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வாகனங்களை புதுப்பிக்கும் நிலையத்திற்கு (கராஜ்) சென்ற சந்தேக நபர், அங்கு தன்னை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரண்டாவது வைத்திய அதிகாரி என கராஜ் உரிமையாளரிடமும் அங்கு வேலை செய்யும் ஊழியர்களிடமும் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக அங்குள்ளவர்களின் மரியாதைக்கும் கௌரவத்திற்கும் ஆளாகியுள்ளார். இதன்காரணமாக அந்த கராஜின்  அங்குள்ள காரியாலயத்திற்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில் அங்குள்ள பணம் வைக்கும் கவுன்டரில் உள்ள பணத்தையும் காசோலைகளையும்  யாருக்கும் தெரியாமல் திருடி வந்துள்ளார். வங்கியில் வைப்பிலிட வைத்திருந்த பணம் காணாமல் போனதை அறிந்த கராஜ் உரிமையாளர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் உள்ள வீடியோ காட்சிகளை பார்வையிட்டபோது சந்தேக நபர் அந்தப் பணத்தை திருடுவது தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து கராஜ் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் காரின் முன்கண்ணாடியில் வைத்தியர்களை அடையாளப்படுத்தும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அனுர அபேவிக்ரமவின் மேற்பார்வையின கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரிய பண்டார, கட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியன்த ஏக்கநாயக்க, குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமன் பிரியந்த மககே தலைமையிலான பொலிஸ்  குழுவினர் சந்தேக நபரை கைது செய்ததுடன் சந்தேக நபரின் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
 கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  நீர்கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில்   ஆஜர் செய்யப்பட்டபோதே எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதவான் உத்தரவிட்டார்.



No comments:

Post a Comment