Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, June 14, 2016

ஊடகவியலாளர் பிரடி கமகே தாக்குதல் சம்பவம் : சந்தேக நபர்களுக்கு 21 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியல்

ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக் குழுவின் அமைப்பாளரும், 'மீபுர' இணையத்தளத்தின் ஆசிரியருமான  பிரடி கமகே மோட்டார் சைக்கிளில் வந்த   இரண்டு நபர்களால் நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த  முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது,  சந்தேக நபர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
போலவலான, ஜனஜயகம பிரதேசத்தைச் சேர்ந்த அக்கனகே குசான் கிரிஸ்மால் (28 வயது), அக்கனகே சுபுன் ரங்க பெர்னாந்து (22 வயது)
ஆகியோரே  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவர்களாவர்.
 சந்தேக நபர்கள் கடந்த 4 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் அஜர் செய்யப்பட்டபோது, இன்று செவ்வாய்க்கிழமை (14) வரை விளக்கமறியலில் வைக்குமாறும் இன்றைய தினம் (14)  சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீர்கொழும்பு பதில் நீதவான்  கருணா ஜீவ கமகே உத்தரவிட்டார்.
இந்நிலையில் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரடி கமகே ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக திங்கட்கிழமை (13) அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பிரதான நீதிவான் ருச்சிர வெலிவத்தவின்   கவனத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது.
இன்று பிரதான நீதவான் முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது,  முறைப்பாட்டாளரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளான தன்த நிரஞ்சன, சாமர ஜயசிங்க ஆகியோர் ஊடகவியலாளர் பிரடி கமகேயின் தலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக  அவர் தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில்  11 ஆம் இலக்க வார்டில் (கண் , காது மற்றும் மூக்கு தொடர்பான வார்ட்) தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக நீதவானின் கவனத்திற்கொண்டு வந்தனர்.
இதனை கருத்தில் எடுத்த நீதவான் சந்தேக நபர்களை  எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும்  உத்தரவிட்டார்.
தொழிற்துறை ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை சிறிய விடயமாக கருத முடியாது எனவும் , அது முழு சமூகத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக கருதுவதாக நீதவான் தெரிவித்தார். அத்துடன் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் பிணை கோரி விடுக்கப்பட்ட மனுவையும் நீதவான் நிராகரித்தார்.


ஊடகவியலாளர் பிரடி கமகே இம் மாதம் 2 ஆம் திகதி  நீர்கொழும்பு மாநகர சபையின் இம்மாத அமர்வை செய்தி சேகரித்துவிட்டு தனது காரில் ஏற முற்பட்ட வேளையில் முழுமையாக தலைக் கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் தடிகளால் தலையில் தாக்கப்பட்டார். திடீர் தாக்குதலை அடுத்து  பிரடி கமகே அங்கிருந்து தப்பியோடி நீர்கொழும்பு மேயரின் காரியாலயத்திற்குள்  ஓடிச் சென்று உயிர் தப்பியமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment