Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, June 28, 2016

ஊடகவியலாளர் பிரடிகமகே தாக்குதல் சம்பவம்: சந்தேக நபர்களின் பிணை கோரிக்கை நிராகரிப்பு: ஜுலை 5 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

ஊடகவியலாளர் பிரடிகமகே நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த   எதிர்வரும் ஜுலை மாதம்  5  ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று செவ்வாய்க்கிழமை (28)  உத்தரவிட்டார்.
சந்தேக நபர்களின் சார்பில் அவர்களின் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட பிணை மனுவை நிராகரித்த நீதவான் சந்தேக நபர்களை  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

போலவலான, ஜனஜயகம பிரதேசத்தைச் சேர்ந்த அக்கனகே குசான் கிரிஸ்மால் (28 வயது), அக்கனகே சுபுன் ரங்க பெர்னாந்து (22 வயது) ஆகியோரே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவர்களாவர்.
சந்தேக நபர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பிணை மனுவை  மன்றில் முன்வைத்தனர்.
இந்த சம்பவத்தை அரசியலாக்கியுள்ளனர். பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் முறைப்பாட்டாளராலேயே பிரசுரிக்கச் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரச்சினையை இணக்கச் சபைக்கு கொண்டு சென்று தீர்த்து வைக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று சந்தேக நபர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாந்த நிரிஹெல்ல கூறினார்.
வழக்கின் முறைப்பாட்டாளர் சார்பில்  சட்டத்தரணிகளான தன்த நிரஞ்சன், சாமர ஜயசிங்க ஆகியோர் ஆஜராயிருந்தனர்.
வழக்கின் முறைப்பாட்டாளர் சார்பில்   ஆஜரான சட்டத்தரணி தன்த நிரஞ்சன் வாதிடுகையில், கடந்த காலங்களில்  முறைப்பாட்டாளரினாலும், ஏனைய ஊடகங்கள் மூலமாகவும் நீர்கொழும்பைச் சேர்ந்த   சில அரசியல்வாதிகள்  அரச உடைமைகளை துஷபிரயோகம் செய்வது தொடர்பாக செய்திகளை வெளியிட்டமையே அந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமாகும்.  இதற்கு சாட்சியாக பிரதி மேயர் தயான் லான்ஸா ஊடகவியலாளர் பிரடி கமகேயுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலை சாட்சியமாக  (சிம் கார்ட் மற்றும் தொலைபேசி உரையாடல்) எடுத்துக் கொள்ள முடியும். சந்தேக நபர்களில்;  ஒருவரினால்  முறைப்பாட்டாளருக்கு நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. எனவே  அவர்களுக்கு பிணை வழங்கினால் விசாரணைகளுக்கு அது தடையாக அமையும். பொலிஸ் விசாரணைகள் தாமதமாகினால் சாட்சிகள்   அழிந்து போக முடியும்  என கூறினார்.
 பொலிஸாருக்கு   தொலைபேசி உரையாடல் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட காலம் போதவில்லையா?   பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்வதற்கு பொலிஸாருக்கு போதிய காலம் வழங்கப்பட்டுள்ளது என நீதவான் தெரிவித்தார்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் திசாநாயக்க சாட்சியமளிக்கையில்  இந்த தாக்குதல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற அடிப்டையிலேயே விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. விசாரணை மேற்கொள்வதற்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படுகிறது என்று மன்றில் தெரிவித்தார்.
இருதரப்பிலும் முன்வைக்கப்பட்ட வாதங்களை அடுத்து பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான்  இந்த வழக்கை ஜுலை மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


No comments:

Post a Comment