நீர்கொழும்பு
கடோல்கலேயில் அமைந்துள்ள நீர்கொழும்பு மாநகர
சபைக்கு சொந்தமான டென்னிஸ் பயிற்சி நிலையத்தை
நீர்கொழும்பு மாநகர சபையின் கீழ் மீண்டும் கொண்டு வருமாறு வலியுறுத்தியும், டென்னிஸ்
சங்கத்தில் நிலவும் முறைகேடுகளுக்கு எதிராகவும் அங்கு பயிற்சி பெறும் மாணவர்களின் பெற்றோர்கள்
இன்று திங்கட்கிழமை முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது
அவர்கள் எதிர்ப்பு கோசங்கள் எழுப்பியதுடன் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும்
ஏந்தியிருந்தனர்.
டென்னிஸ்
பயிற்சி மைதானம் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும், பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறாத
மாணவர்களின் பெற்றோர்களே சங்கத்தில் அங்கத்துவம் வகிப்பதாகவும், பல வருட காலமாக சங்கத்தின்
நிருவாக சபைக்கான தேர்தல் நடைபெறவில்லை எனவும், ஒரு சில அரசியல்வாதிகளின் கையாட்களின்
கீழ் சங்கம் நிருவகிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.
இதுதொடர்பாக
நீர்கொழும்பு பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு
பிரதான அமைப்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின்
மேல் மாகாண சபை உறுப்பினருமான ரொயிஸ் பெர்னாந்து தெரிவித்தபோது,
நீர்கொழும்பு
நகரில் உள்ள அரச சொத்துக்கள் பல பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவரின் குடும்பத்தவர்களாலும்
அவரின் ஆதரவாளர்களான அடியாட்கள் சிலராலும் பயன்படுத்தப்படுகிறது. நீர்கொழும்பு டென்னிஸ் பயிற்சி நிலையம், ஜெயராஜ் பெர்னாந்து புள்ளே
உள்ளக விளையாட்டரங்கு, நீர்கொழும்பு கடற்கரைப் பூங்கா என பல உதாரணங்களை கூறலாம். நடைபெறவுள்ள
உள்ளுராட்சி தேர்தலில் நீர்கொழும்பு மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றிய பின்னர்
இதற்கு ஒரு முடிவு கட்டப்படும் என்றார்.
No comments:
Post a Comment