தீர்வை கட்டணம் (TAX) செலுத்தாமல் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உதிரிப் பாகங்களை பொறுத்தி தயாரிக்கப்படட 3 மோட்டார் சைக்கிள்களை நீர்கொழும்பு
சட்டத்தை நிலைநிறுத்தும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் நேற்று (3-4-2017)
கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆண்டி அம்பலம பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள பேலிகே சரித் லக்ஷான் (26 வயது) என்பவரே கைது செய்யப்பட்ட சந்தேக நபராவார்.
இதுதொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது,
மோட்டார் சைக்கிள்களை உதிரிப்பாகங்களாக பிரித்து ஜப்பானிலிருந்து நாட்டுக்குள் தீர்வைக் கட்டணம் செலுத்தாமல் கொண்டு வந்து, மீளவும் அவற்றைப் பொறுத்தி விற்பனை செய்யும் சட்டவிரோத செயல்பாடு தொடர்பாக தகவல் ஒன்று கிடைத்தது. இதனை அடுத்து ஆண்டி அம்பலம பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அந்த வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 250 சிசி 3 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த மோட்டார் சைக்கிள்களை தீர்வைக் கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் விற்பனை செய்வதாக இருந்தால் ஒரு சைக்கிளின் பெறுமதி 12 இலட்சம் ரூபாவாகும். ஜப்பானிலிருந்து மோட்டார் சைக்கிள்களை உதிரிப்பாகங்களாகப் பிரித்து நாட்டுக்குள் கொண்டு வந்து. அவற்றை கொழும்பில் வைத்துப் பொருத்தி போலி ஆவணங்களை தயார் செய்து விற்பனை செய்துள்ளனர். ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் 12 இலட்சத்திற்கும், ஆவணம் இல்லாத நிலையில் 5 முதல் ஐந்தரை இலட்சம் ரூபா வரைக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை (4-4-2017) மினுவாங்கொடை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்கவின் ஆலோசனையின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹனவின் வழிகாட்டலில் சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஆர்.ஏ. ஜி. மனோகர, பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.சந்தன, கான்ஸ்டபிள்களான அமல், ஜயசிங்க , சமித, சிந்தக ஆகியோர் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளை கைப்பற்றியுள்ளனர்

No comments:
Post a Comment