Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, July 31, 2018

கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெறும் திருமதி ராஜரேகரம் ஆசிரியை


 கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறாரா? திருமதி ராஜரேகரம் ஆசிரியர் என்ற கேள்வி ஆசிரியர்கள் மத்தியில் மட்டுமல்ல மாணவர்கள் மத்தியிலும் எழுகின்றது. அந்தளவிற்கு அவரின் இளமைத் துடிப்பாலும், எந்நேரமும் புன்னகை மிளிரும் வசீகரக் குணத்தாலும் அனைவரினதும் உள்ளங்களிலும் இடம் பிடித்துள்ளார் என்பதுதான் உண்மை!
பாடம் கற்பித்தல் என்பது அரிய கலை. தாம் கற்றதை மாணவர் மனதில் பதியும் வகையில் புரியுமாறு எடுத்துரைக்கும் வல்லமை ஆசிரியருக்கு வேண்டும். அத்தகைய திறமை இல்லா ஆசிரியர் நறுமணம் வீசாத கவர்ச்சியாக விளங்கும் காசிப் பூவுக்குச் சமம் என்பார் திருவள்ளுவர். ஒரு நல்லாசிரியனுடைய இலக்கணத்தை பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பவணந்தி முனிவர் தான் இயற்றிய நன்னூல் என்னும் இலக்கண நூலில் பதிவு செய்கிறார்.

அவ்வகையில் ஒரு நல்லாசிரியருக்கு இலக்கணமாகத் திகழ்ந்த, நீரகொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் வரலாறும் புவியியலும் கற்பிக்கின்ற ஆசிரியையாக கடமையாற்றி திருமதி ஜேற்றூட் அனுஸ்டா ராஜசேகரன் அவர்கள் 31.07.2018 அன்று தனது 31 வருட கல்விப்பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
யாழ்ப்பாணம் நாவாந்துறையை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் சோதி பற்றிக், செபமாலை பற்றிக் தம்பதியினரின் புதல்வியாவார். நாவாந்துறை றோமன் கத்தோலிக்க கலவன் வித்தியாலயம், யாழ்ப்பாணம் திருக்குடும்பக் கன்னியர் மடம் ஆகியவற்றில் தனது ஆரம்ப, உயர்நிலைக் கல்வியைப் பூர்த்தி செய்த இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்புப் பட்டதாரியாக பட்டம் பெற்று வெளியாகி பட்டப்பின் கல்வி டிப்ளோமா தொழிற்கல்வியையும் நிறைவு செய்து தனது கல்விப ;பணியில் முதல் காலடியைப் பதித்தது கண்டி தெல்தோட்டை மலைமகள் மத்திய கல்லூரியிலாகும். அங்கு தனது 13 வருட கல்விசேவையை சிறப்பாக நிறைவேற்றி ஈற்றில் 10.04.2000 ஆம் ஆண்டில் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரிக்கு மாற்றலாகி 18 வருடங்கள் தொடர்ந்து பணியாற்றியுள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் வகுப்பாசிரியராக, பகுதித்தலைவராக, ஒழுக்காற்றுக் குழு அங்கத்தவராக, விளையாட்டுப் போட்டி இல்லப் பொறுப்பாசிரியராக, விளையாட்டுப் போட்டிக்குழு உறுப்பினராக, பரிசளிப்புத்தினக் குழு அங்கத்தவராக, கிறித்தவ மன்றப் பொறுப்பாசிரியராக இருந்து பல பணிகளைப் புரிந்த இவரை பாடசாலை சமூகம் குறிப்பாக மாணவர்கள் சிறப்பாக என்றென்றும் நினைவு கூருவர்.
தான் சார்ந்திருந்த கடமைகள், பொறுப்புகள், பணி என்பவற்றில் நேர்மை, துணிச்சல், அர்ப்பணிப்பு, ஒழுக்கம் போன்ற பலதரப்பட்ட தலைமைத்துவப் பண்புகளால் அனைவரது நன்மதிப்பையும் பெற்று அயராது பணிபுரிந்தார்.
மாணவர்கள் மத்தியில் ஒரு கதாநாயகியாக வலம் வந்த இவருக்கு அவர்கள் மத்தியில் பயமுமிருக்கும், பக்தியுமிருக்கும், பணிவுமிருக்கும், அளவுக்கதிகமான அன்புமிருக்கும். இவரின் பயன் கருதாமல் பிரத்தியேக வகுப்புகளும் கன்னலாய் இனிக்கவரலாற்றைக் கற்பிக்கின்ற பாணியும் அனைவருக்கும் எடுத்துக்காட்டானவையாகும்.
அதுமட்டுமா? எவ்விடத்தும் தன்னினத்தாரை விட்டுக் கொடுக்காமை, சுற்றுலாத் துடிப்பு, சோர்வின்மை போன்ற விழுமியப் பண்புகளால் ஆசிரிய குழாத்தின் மத்தியிலும், கண்டிப்புடனான பாசத்தாலும், சிநேகபூர்வமாக பழகும் பண்பாலும் மாணவர்கள் மனத்திலும் இடம் பிடித்த இளவரசியாவார்.
இவரது கல்விப் பணிக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் தோளோடுதோள் கொடுத்து உறுதுணையாய் இருந்தவர் துணைவர் அமரர் N. ராஜசேகரன் அவர்கள் ஆவார். இவரும் கணிதப் பாட ஆசிரியராக 35 வருடங்கள் கல்வி பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது கல்விச் சமூகம் இவரது பணியினை பாராட்டுவதுடன் இவர் ஓய்வுபெறுவது பாடசாலைக்கு ஒரு இழப்பாகவும் கருதுகின்றது. நல்ல தேகாரோக்கியமும், நீண்ட ஆயுளும், மனோதிடமும் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக!
வாழ்க இவர் புகழ்!!!

No comments:

Post a Comment